காரைக்குடியில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் வண்டியின் ஒரு சக்கரம் உடைந்தபோதும் மனம்தளராமல் வண்டியை ஓட்டிச் சென்ற இளைஞரை மக்கள் பாராட்டினர்.

காரைக்குடி கழனிவாசல் அய்யுளி அம்மன் கோயில் திரு விழாவையொட்டி சூரக்குடி சாலையில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 51 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரிய மாடு பிரிவில் 10 ஜோடிகள், கரிச்சான் பிரிவில் 41 ஜோடிகள் பங்கேற்றன.

கரிச்சான் பிரிவில் ஒரே நேரத்தில் 41 ஜோடிகளுக்கும் போட்டி வைக்கப்பட்டதால், பல வண்டிகள் ஒன்றையொன்று முந்திக்கொண்டு உரசியபடி சென்றன. இதில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த விஜி ஓட்டிச் சென்ற மாட்டுவண்டி பாதி வழியில் மற்றொரு வண்டியின் பக்கவாட்டில் உரசியது. இதில் விஜியின் வண்டியின் வலது பக்க சக்கரம் உடைந்தது.

ஆனாலும் மனம் தளராத விஜி, மாட்டுவண்டியை போட்டியின் எல்லைக்கோடு வரை ஓட்டிச் சென்றார். கடைசி வரை ஒற்றைச் சக்கரத்தில் ஓட்டிச் சென்ற விஜி 7-வது இடத்தைப் பிடித்தார். அவர் தோல்வி அடைந்தாலும், அவரது விடாமுயற்சியை அங்கிருந்தோர் பாராட்டினர்.