புதுடெல்லி: வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதோடு, தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், மார்ச் 2-ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

காங்கிரஸ் எம்எல்ஏ மறைவால் தேர்தல்: திராவிடர் கழக நிறுவனர் பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் கிருஷ்ணசாமியின் மகன் ஈ.வெ.கி.சம்பத். திமுக, காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கட்சி என அரசியல் பயணத்தைத் தொடர்ந்த சம்பத்தின் மகன் ஈவிகேஎஸ் இளங்கோவன். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், மத்திய அமைச்சர் பதவிகளை வகித்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா (46).

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார் திருமகன் ஈவெரா. அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியின் சார்பில் தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா போட்டியிட்டார். இந்த தேர்தலில், 8904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். 41 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோட்டில் காங்கிரஸ் வெற்றிபெற்று, பெரியாரின் கொள்ளுப்பேரன் திருமகன் ஈவெரா சட்டசபைக்குச் சென்றார்.

திருமகன் ஈவெரா

இந்நிலையில், கடந்த ஜனவரி 4-ஆம் தேதி அவர்மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. காலியான தொகுதியில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. இந்நிலையில் மூன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் அத்துடன் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது.