அரசுப் பள்ளிகளில் தூய்மைப்பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.6.24 கோடி நிதியை பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பாதுகாப்பு உணர்வுடன் கல்வி கற்கும் சூழலைஏற்படுத்துவதற்காக வளாகத்தை மிகவும் தூய்மையாக வைத்திருப்பது அவசியமாகும்.

அந்தவகையில் பள்ளி ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் 31,210 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.6.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியை பள்ளி வளாகம், வகுப்பறைகள் மற்றும் கழிவறைகளை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். தூய்மைப் பணிகளை கண்காணிக்க ஆசிரியர் ஒருவரை பொறுப்பாளராக நியமிக்க வேண்டும்.

மேலும், பள்ளிகளில் தூய்மைப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாதந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.