பாஜகவில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களின் வலியை முழுமையாக உணர்ந்தவர்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட (தெற்கு) பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “ தமிழக நலனில் அக்கறை இல்லாத முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார். மத்திய அரசை வம்புக்கு இழுப்பது, பிரதமர் மோடியை இழிவாக பேசுவது, மத்திய அரசுக்கும், மாநிலத்துக்கும் மோதலை ஏற்படுத்துகிறார்.

கரோனா தொற்றால் நமக்கு உயிர் பயம் இருந்தது. கரோனா தொற்றில் இருந்து விடுபட 170 கோடி தடுப்பூசியை பிரதமர் மோடிவழங்கியுள்ளார். கரோனா தொற்றில் இருந்து தப்பித்துவிட்டோம் என்ற நம்பிக்கை, நம்மிடையே ஏற்பட பிரதமர் மோடிதான் காரணம். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டாம் என எதிர்கட்சி தலைவராக உள்ளபோது சொன்னவர் மு.க.ஸ்டாலின்.

தி.மலையில் ஒருவரே தொடர்ந்து எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் உள்ளார். அவரது மகனும், அரசியல் களம் இறங்கிவிட்டார். அமைச்சராக இருந்து, 3 பொறியியல் கல்லூரிகளை கட்டி செல்வத்தை குவித்து, அடுத்து தனது மகனை அரசியல் தலைவராக உருவாக்க வேண்டும் என நினைக்கும் ஒரு தலைவர் கூட பாஜக மேடையில் கிடையாது. பாஜகவில் போட்டியிடும் வேட்பாளர்கள் சாமானியர்கள், மக்களின் வலியை முழுமையாக உணர்ந்தவர்கள்.

ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில், 50 சதவீத கல்லூரிகள் திமுக அமைச்சர்கள், அவர்களது பினாமிகள் நடத்துகின்றனர். நீட் தேர்வுக்கு முன்பாக, 42.50 சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு ஒதுக்கி வைத்துவிட்டார் கள். இதனால், அரசு பள்ளியில் படித்த ஒரு சதவீத மாணவர்களுக்கு கூட மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நீட் வந்த பிறகு, மதுரை கூலி தொழிலாளி மகள், திருப்பத்தூரில் முதல் முறையாக அரசு பள்ளி மாணவர், இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவிக்கு ‘மருத்துவம்‘ படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட போராடுகிறோம். மாற்றம் வர வேண்டும் என்றால் பாஜகவின் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.

அப்போது, மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில பொதுச் செயலாளர் நரேந்திரன், கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன், மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.