கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. தொற்றுபரவாமல் தடுப்பதற்காக, சென்னைகாவல் ஆணையர் சங்கர்ஜிவால் சென்னை பெருநகரில் அனைத்து காவல் நிலையங்களில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸாரைக் கொண்டு சிறப்பு குழுக்களை ஏற்படுத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, சென்னை பெருநகர காவல்துறை சிறப்பு குழுக்கள் மற்றும் காவல் குழுவினர் கடந்த 2 முதல் 4-ம் தேதி வரையிலான 3 நாட்கள் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். முகக்கவசம் அணியாமல் சென்ற பொதுமக்கள் மீது10,321 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.20,64,200 வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 41 வழக்குகளும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காதது தொடர்பாக 7 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டு, கரோனா ஊரடங்குவிதிமுறைகளை மீறியது தொடர்பாக 303 இருசக்கர வாகனங்கள் மற்றும் 14 ஆட்டோக்கள் என மொத்தம் 317 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

மக்கள் ஒத்துழைக்க வேண்டும்

மேலும், கரோனா தடுப்புவழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து, தொற்று பரவல் ஏற்படாத வண்ணம்ஒத்துழைக்க வேண்டும் எனவும் காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.