இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தவர், பார்சிக்கள், சீக்கியர்கள், ஜெயின் சமூம் என 6 மதத்தை சேர்ந்தவர்கள் மதசிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்து மத தலைவர் தேவகி நந்தன் தாக்குர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: பஞ்சாப், காஷ்மீர், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர், கேரளா, அருணாச்சல் பிரதேசம், லட்சத்தீவுகள் ஆகிய 9 மாநிலங்களில் இந்துக்கள் குறைந்த அளவில் உள்ளனர். அவர்களுக்கு அங்கே சிறுபான்மையினர் என்ற அந்தஸ்து கிடைப்பதில்லை. கல்வி நிலையங்களில் அவர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கப்படுவதில்லை. அதன்படி இடஒதுக்கீடும் கிடைப்பதில்லை. இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்க முடியாது என்ற பொதுவான கருத்தும் நிலவுகிறது.

எனவே, இந்த 9 மாநிலங்களில் இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி யூயூ லலித் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாதர் கூறும்போது,“1993 அறிவிப்பு ஆணையின்படி 6 மதத்தினர் மட்டுமே சிறுபான்மையினராக கருதப்படுகிறார்கள். சிறுபான்மையினர் யார் என்று மாநிலங்களால் அறிவிக்கப்பட வேண்டும் என்று பல நீதிமன்றங்கள் தீர்ப்பு கூறியுள்ளன. 9 மாநிலங்களில் இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து தரவேண்டும்” என்றார்.

அப்போது நீதிபதி யூ.யூ. லலித்கூறும்போது, ‘‘மிசோரம் அல்லது காஷ்மீர் மாநிலங்களில் இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து மறுக்கப்படுவதாக வலுவான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே இதை கவனத்தில் எடுத்துக் கொள்ள முடியும். சிறுபான்மை தொடர்பான அனைத்து விவகாரங்களும் மாநில வாரியாக ஆய்வு செய்யப்படாது. எனவே, வலுவான ஆதாரங்களை கொடுங்கள்’’ என்றார். 2 வாரங்கள்கழித்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதி அப்போது உத்தரவிட்டார்.