பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, மட்கக் கூடிய பைகளை தயாரிக்க இயலும் என்றால் மூடப்பட்ட பிளாஸ்டிக் நிறுவனங்களை மீண்டும் இயக்க அனுமதிப்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சுற்றுச்சூழல் ஆர்வலர் சோபனா தரப்பில், “மட்கக்கூடிய பைகளுக்கான பெட்ரோகெமிக்கல் டெக்னாலஜி நிறுவனமும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், இந்த பைகளை மட்கச் செய்வதற்கான உரக்கிடங்குகள் தமிழ்நாட்டில் இல்லை” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “மட்கக் கூடிய பைகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அந்த பைகளை மட்கச் செய்வதற்கான உரக்கிடங்கை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மட்கக் கூடிய பைகளை தயாரிக்க முடியும் என்றால், மூடப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களை மீண்டும் இயங்க அனுமதியளிப்பது குறித்து பரிசீலிக்கலாம்” என்று தெரிவித்தனர்.

மேலும், சோதனை முயற்சியாக ஏதேனும் ஒரு மாநகராட்சி அல்லது மண்டலத்தில் ஆவின் பாலை பாட்டிலில் விற்பது குறித்து நீதிபதிகள் ஆலோசனை தெரிவித்தனர். ஆராய்ந்து விளக்கமளிப்பதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணை மார்ச் 8ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.