விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்ய ஏதுவாக, வழக்கு தொடர்பான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த சலிமா பானு தாக்கல் செய்த பொது நல வழக்கில், “சாலை விபத்தில் பலியான எனது மகன்களுக்கு இழப்பீடு கோரி மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தேன். ஆனால் விபத்து வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் மனு தாக்கல் செய்யக் கூறி, மனுவை தீர்ப்பாயம் திருப்பி அளித்து விட்டது.

குறிப்பிட்ட அந்த ஆவணங்களை வழங்கக் கோரிய போது, காவல் துறையினர் லஞ்சம் கேட்டனர். ஆவணங்களை பெற முடியாததால் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல பல விபத்து வழக்குகளில் காவல் துறையினர் நடந்து கொள்கின்றனர். எனவே, அப்பாவி பொதுமக்கள் வழக்கு ஆவணங்களை பெறும் வகையில், விபத்து வழக்குகள் தொடர்பான ஆவணங்களை காவல் துறையின் பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக டிஜிபி உள்ளிட்ட காவல் துறையினருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.