மதுரை தல்லாகுளம் – அழகர்கோவில் சாலையில் இயங்கி வரும் காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 12 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்குள்ள பொருளாதார துறையின் பொறுப்பு தலைவராக கடந்த 2017ம் ஆண்டு முதல் பேராசிரியை ரெஜினாதேவி என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர், இளநிலை பொருளாதார வகுப்பில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்களை சாதி ரீதியான பாகுபாட்டுடன் அணுகுவதாகவும், திட்டமிட்டு அந்த மாணவர்களின் வருகைப்பதிவு மற்றும் தேர்வு முடிவுகளில் முறைகேடு செய்வதாகவும், அதனால் சில மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்று விட்டதாகவும் கல்லூரி முதல்வர் பி.ஜார்ஜிடம் மாணவர்கள் புகார்கள் அளித்துள்ளனர்.

அந்த புகார்கள் தொடர்பாக முதல்வர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும், உயர்கல்வித் துறைக்கும் புகார்கள் அனுப்பி உள்ளனர்.
அவற்றின் எதிரொலியாக காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.குமார் இன்று மதியம் நேரடியாக கல்லூரிக்கு ச் சென்று பேராசிரியை ரெஜினா தேவி மற்றும் முதல்வர் ஜார்ஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த தகவலில், “மாணவர்கள் அளித்த புகார் தொடர்பாக கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியை ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. தேர்வு நடப்பதால் சூழல் பார்த்து விரைவில் புகாரளித்த மாணவர்களிடமும் விசாரணை நடத்த உள்ளோம். அதனை தொடர்ந்து விசாரணை குழு அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.

பேராசிரியையின் தவறான  நடத்தை காரணமாக மாணவர்கள் சிலர் படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளதாக கூறப்படும் நிலையில், “மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்துவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இருந்தாலும், அந்த புகார்கள் குறித்தும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

தாழ்த்தப்பட்ட மாணவர்களுடைய கல்விக்கனவை பூர்த்தி செய்ய வேண்டிய கடமையுள்ள அரசு கல்லூரியிலேயே பேராசிரியை ஒருவரின் சாதிய பாகுபாடு புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த விவகாரம் குறித்து விரைவாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பேராசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.