மதுரையில் உள்ள மக்கள் கண்காணிப்பகத்தின் மீது வழக்குப் பதிவு செய்து அங்கு சிபிஐ சோதனை நடத்தப்பட்டதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் புகழ்பெற்ற மனித உரிமை அமைப்பான மக்கள் கண்காணிப்பகத்தின் மீது வழக்குப் பதிவு செய்து அதன் அலுவலகத்தில் சிபிஐ சோதனையிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புகள் நன்கொடை பெறும் வாய்ப்பை மறுப்பதும் அவர்களின் செயல்பாடுகளை முடக்குவதுமாக மோடி அரசு தொடுத்துள்ள சனாதன தாக்குதலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மக்கள் கண்காணிப்பகம் உலக அளவில் புகழ்பெற்ற ஒரு மனித உரிமை அமைப்பாகும். அது எஃப்.சி.ஆர்.ஏ’வின் கீழ் பெற்ற நன்கொடைகள் குறித்த அனுமதியை 2012ஆம் ஆண்டு அன்றைய மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. அதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு 2014, மே மாதத்தில் மக்கள் கண்காணிப்பகத்துக்கு ஆதரவாக டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பாஜக தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றபின் கடந்த 2016ஆம் ஆண்டு மக்கள் கண்காணிப்பகத்தின் எஃப்.சி.ஆர்.ஏ அனுமதியைப் புதுப்பிக்க மறுத்தது. அதை எதிர்த்து மீண்டும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு அது நிலுவையில் உள்ளது.
இதனிடையில் தற்போது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 120-B, 420 ஆகியவற்றின் கீழ் மக்கள் கண்காணிப்பகத்துக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்து நேற்று அதன் தலைமையகத்தில் சோதனை நடத்தியுள்ளது.
எஃப்.சி.ஆர்.ஏ கணக்கில் தவறு நடந்திருக்கிறது என்று அரசு கூறுவதெல்லாம், மக்கள் கண்காணிப்பகத்தின் மனித உரிமைச் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்பதே அதன் நோக்கம். இந்தியா முழுவதும் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் இப்படித்தான் மோடி அரசு முடக்கி வருகிறது. அன்னை தெரசாவால் நிறுவப்பட்ட தொண்டு நிறுவனத்தின் எஃப்.சி.ஆர்.ஏ அனுமதியையும் இப்படித்தான் சில நாட்களுக்கு முன் முடக்கியது. அதற்கு எதிராக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதால் உடனடியாக தடையை விலக்கிக் கொண்டு பின்வாங்கியது.
அமெரிக்காவில் செயல்படும் இந்துத்துவ அமைப்புகள் அதிக அளவில் பணம் திரட்டி இந்தியாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகிய அமைப்புகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் அதிக அளவில் அயல்நாடுகளிலிருந்து பண உதவி பெறும் அமைப்புகளாக இந்துத்துவ அமைப்புகளே உள்ளன என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் மக்களுக்காகச் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை முடக்குவது, இன்னொரு புறம் வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் இந்துத்துவ அமைப்புகளுக்கு அயல்நாட்டுப் பணத்தை அதிக அளவில் பெறுவது என்ற முறையில் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.
மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகள் மீது பாஜக அரசு தொடுத்துள்ள இந்த சனாதனத் தாக்குதலைக் கண்டிப்பதும் இந்த அமைப்புகளைப் பாதுகாப்பதும் சனநாயக சக்திகளின் கடமையாகும். மக்கள் கண்காணிப்பகத்தின் மீது ஏவப்பட்டுள்ள இந்தத் தாக்குதலைக் கண்டித்துக் குரல் எழுப்புமாறு அனைத்து சனநாயக சக்திகளையும் அழைக்கிறோம்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.