இன்று குடியரசு தலைவராக திரவுபதி முர்மு தேர்வாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கொண்டாட்டங்களுக்காக ஒடிசாவில் அவரது சொந்த ஊரான ராய்ரங்பூர் தயாராகி வருகிறது.

காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசு தலைவர் தேர்தலில் செலுத்தப்பட்ட வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதில், பாஜக தலைமையில் மத்தியில் ஆளும் கூட்டணியின் வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரான யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டுள்ளனர். இதில், திரவுபதி முர்முவின் வெற்றி உறுதியாகி விட்ட நிலையில், அவரது சொந்த ஊரில் கொண்டாட்டங்கள் தயாராக உள்ளன.

ஒடிசாவின் ராய்ரங்பூரில் முடிவுகள் அறிவிப்பிற்கு விநியோகிக்க 50,000 லட்டுக்கள் தயாராக உள்ளன. முர்முவின் சொந்த கிராமத்திற்கு அதை சுற்றியுள்ள கிராமத்தினரும் வந்தபடி உள்ளனர். இவர்கள் அனைவரும் இணைந்து முர்முவின் வெற்றியை மாபெரும் ஊர்வலம் நடத்திக் கொண்டாட உள்ளனர். இதில், ஒடிசா பழங்குடிகளின் பாரம்பரிய நடனமும் இடம்பெற உள்ளது.

இதற்காக அதன் கலைஞர்களும் ராய்ரங்பூர் வந்து சேர்ந்துள்ளனர். திரவுபதியின் வெற்றிக்கு வாழ்த்தி ஒடிசா முழுவதிலும் நூற்றுக்கணக்கான பெரும் பதாகைகளும் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. ராய்ரங்பூரின் பாஜக பிரிவினரும் தனியாக வெற்றி கொண்டாட்டம் நடத்த உள்ளனர். இவர்களும் ஒரு ஊர்வலம் நடத்தி அனைவருக்கும் இனிப்புகள் வழங்க 20,000 லட்டுக்களை தயார் செய்துள்ளனர்.

இது குறித்து திரவுபதியின் அத்தையான சரஸ்வதி முர்மு கூறும்போது, ‘ஒரு பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு முன் உதாரணமாகி உள்ளார் எங்கள் பார்வதி முர்மு. இவர், தனது வாழக்கையில் பல்வேறு வகை கஷ்டங்களை அனுபவித்து முன்னேறியவர். பார்வதியின் கடின காலங்கள் மற்றும் நல்ல நாட்களில் நாம் அவருக்கு துணையாகவே இருந்தோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லியிலும் கொண்டாட்டம் : பார்வதி முர்முவின் வெற்றியை டெல்லியிலும் பாஜக உற்சாகமாகக் கொண்டாடத் தயாராகிறது. இங்குள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதன் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் இந்நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

பாஜக அலுவலகம் அமைந்துள்ள பந்த் மார்க்கின் சாலைகளிலும் கட்சித் தலைவர்கள் அணிவகுத்துச் சென்று வெற்றியை கொண்டாத் திட்டமிட்டுள்ளனர். பார்வதி முர்மு நாட்டின் இரண்டாவது பெண் குடியரசு தலைவராக பதவி வகிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது