அரசு சிமென்ட் உற்பத்தியை அதிகரித்து, சிமென்ட் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது சேலம் மேற்கு தொகுதி பாமக உறுப்பினர் அருள், ‘‘சிமென்ட் விலை உயர்வால் வீடுகளில் பராமரிப்பு பணிகளைக்கூட மேற்கொள்ள முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் சிமென்ட் விலைரூ.300 முதல் 360 என இருக்கும்போது, தமிழகத்தில் ரூ.490 வரைவிற்கப்படுகிறது. ஆலை அதிபர்கள் சிண்டிகேட் அமைத்து தினமும்விலையை உயர்த்தி வருகின்றனர். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு டான்செம் சிமென்ட் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

சிமென்ட் விலை இந்த ஆண்டுதொடக்கத்தில் ரூ.420 ஆக இருந்தநிலையில், ஜூன் மாதம் ரூ.490 வரை சென்றது. முதல்வர் உத்தரவுப்படி ஜூன் 16-ம் தேதி சிமென்ட் ஆலைஉரிமையாளர்களை அழைத்துப் பேசி, விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், விலை குறைக்கப்பட்டது. இப்போது முதல் தர சிமென்ட் ரூ.420-க்கு கிடைக்கிறது.

அரசு சிமென்ட்டான ‘டான்செம்’ உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 3 அலகுகளிலும் சேர்த்து 17 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், 10 லட்சம் டன்உற்பத்திக்கான அலகு நிறுவப்பட்டுள்ளது. இதுதவிர, ‘வலிமை’என்ற டான்செம் நிறுவன சிமென்ட்டை முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார். அரசு சிமென்ட் உற்பத்தியை அதிகரித்து விற் பனைக்கு கொண்டுவருவதன் மூலம் வெளிச்சந்தையில் சிமென்ட்விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.