தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வளிமண்டல கிழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை முதல் 4 நாட்களுக்கு புதுச்சேரி, தமிழ்நாடு, காரைக்காலில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று தென்மேற்கு, மத்திய கிழக்கு, மராட்டியம், கோவா கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும். நாளை, நாளைமறுநாள் தென் மேற்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல், மராட்டியம், கோவா, கேரளாவில் பலத்த சூறாவளி வீசும். கர்நாடகா, லட்சத்தீவு கரையோர பகுதிகளில் பலத்த சூறாவளி வீச வாய்ப்பு உள்ளது. ஜூன் 13ல் தென் மேற்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா, கர்நாடகா, லட்சத்தீவில் பலத்த சூறாவளி வீசும். மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் மேற்கில் இருந்து சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு 4 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.