மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் உறுதிமொழி எடுக்கப்பட்ட விவகாரத்தில், உண்மைகளை சரிபார்த்து கண்ணியம், ஒருமைப்பாட்டை தக்கவைத்துக் கொள்ளுங்கள் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் உறுதிமொழி எடுக்கப்பட்டது தொடர்பாக அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மகரிஷி சரகர் உறுதி மொழி ஷரத்துகளின் ஆங்கில மொழிபெயர்ப்பை பதிவிட்டு, “இந்த உறுதி மொழியில் எது ஆட்சேபனைக்குரியது என்று யாரவது சொல்ல முடியுமா?” என்று கேட்டுள்ளார்.

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “சரி எங்கே இருந்து ஆரம்பிப்பது. ஓ எனக்குத் தெரியும். நீங்கள் பதிவிட்ட படம் மதுரை மருத்துவக்கல்லூரியில் எடுப்பட்ட உறுதி மொழி அல்ல (உண்மையான உறுதிமொழி இணைக்கப்பட்டுள்ளது).

இப்படி வெட்கமற்ற நிலைக்குள் இறங்குவதற்கு முன்பாக, உண்மைகளை சரிபார்த்து, கண்ணியத்தை கொஞ்சம் தக்க வைத்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பகிர்ந்த உறுதிமொழி விவரத்தில் சில அம்சங்களை மஞ்சள் நிறமிட்டு ஹைலைட் செய்துள்ளார். அதில், ‘நான் (குறிப்பாக ஆண் மருத்துவர்) ஒரு பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க நேர்ந்தால், அவரது கணவர் அல்லது உறவினர் முன்னிலையில்தான் சிகிச்சை அளிப்பேன்’ என்பன உள்ளிட்ட கருத்துகள் இடம்பெற்றிருந்தன.

முன்னதாக, மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் சனிக்கிழமை நடந்த விழாவில் இறுதி ஆண்டு, முதலாமாண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதி மொழி எடுத்துக்கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பாக மருத்துவக்கல்லூரி டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.