இந்தியாவில் அழிந்துபோன பாலூட்டி இனமான சீட்டா வகை சிறுத்தைகளை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முயற்சிகளை தொடங்கியுள்ளது.
காடுகளில் சிங்கத்தை போலவே தனி சாம்ராஜ்ஜியம் நடத்துகிற விலங்கினம் என சிறுத்தையைக் குறிப்பிடலாம். பூனை இனத்தைச் சேர்ந்த விலங்கினமான சிறுத்தையில் மட்டும் நான்கு வகையில் உள்ளன. லெபர்ட், ஜாகுவார், சீட்டா, பூமா என நான்கு வகை கொண்ட சிறுத்தை இனத்தில் அசாத்திய குணங்கள் கொண்டது சீட்டா வகை சிறுத்தை. மற்ற வகை சிறுத்தைகளை விட, சீட்டாவிற்கு சிறிய முகமும் பெரிய வால் பகுதியும் இருக்கும். பொதுவாகவே சிறுத்தை அதிகமாக ஓடும் திறன்கொண்டது. அதிலும் இந்த சீட்டா வகை சிறுத்தை பெரிய கால்கள் கொண்டிருப்பதால், 100 கிலோ மீட்டர் வேகத்தை 3 வினாடிகளில் அடைந்துவிடும். உலக அளவில் தற்போது மொத்தம் 7000 அளவிலான சீட்டா வகை சிறுத்தைகள் மட்டுமே இருக்கின்றன.
இந்தியாவில் சீட்டா வகை சிறுத்தை கிடையாது, இந்தியாவில் ஆரம்பத்தில் சீட்டா வகை சிறுத்தைகள் இருந்துள்ளன. முகலாய பேரரசர் அக்பர் மற்றும் அவரது மகன் ஜஹாங்கிர் ஆட்சி காலத்தில் இந்த சீட்டா வகை சிறுத்தைகள் சிறைபிடிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதாக தரவுகள் சொல்கின்றன.
ஆனால், காலங்கள் செல்லச் செல்ல வேட்டையாடிகளின் கொடூரத்தால் சுதந்திரத்துக்கு பிறகு இந்த இனம் இந்தியாவில் இருந்து அழிந்து போனது. 1952-க்கு பிறகு இந்த இனம் இந்தியாவில் முற்றிலும் இல்லை என்று அரசு அறிவித்துவிட்டது. அப்போது முதலே இந்திய அரசு இந்த வகை சிறுத்தையை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டு வந்தன. 1970 காலகட்டத்தில் இரானில் இருந்து 300 சீட்டாக்களை இறக்குமதி செய்ய இந்திய அரசு முயற்சித்தது. ஆனால், அந்த முயற்சி அந்த நாட்டில் நிலவிய அரசியல் சூழலால் தோல்வியை தழுவியது.
இதனிடையே, தற்போதைய மத்திய அரசு சீட்டா வகை சிறுத்தையை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவர ஒரு ஆக்ஷன் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்டிசிஏ) 19-வது கூட்டம் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், ‘Action Plan for Introduction of cheetah in India’ என்கிற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 சீட்டா வகை சிறுத்தைகள் அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்திய காடுகளில் விடப்படவுள்ளன.
முதல்கட்டமாக 10-12 இளம் சீட்டாக்கள் இந்த ஆண்டு நமீபியா அல்லது தென்னாப்பிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என மத்திய வனத்துறை தெரிவித்துள்ளது. ஐந்து மாநில காடுகளில் ஆய்வு செய்யப்பட்டு, அதிலிருந்து இறுதியாக 10 இடங்கள் சீட்டாக்களை விட தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ பால்பூர் தேசியப் பூங்கா (KNP) இந்தப் பத்து இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டே இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், கரோனா சூழல் காரணமாக அது முடங்கிப்போக தற்போது இந்த திட்டம் மீண்டும் கையிலெடுக்கப்பட்டுள்ளது.