சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வத்தை கைது செய்ய உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோயில்கள் இடிக்கப்படுவது தொடர்பாக தமிழக பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி. செல்வம் சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவரது பதிவு உண்மைக்கு புறம்பாகவும், வதந்தியை பரப்பி இரு பிரிவினர் இடையே வெறுப்பு, பகைமை உணர்வை உருவாக்கி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் உள்ளதாகவும் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், வினோஜ் பி.செல்வம் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வினோஜ் பி.செல்வம் மனு தாக்கல் செய்தார். ‘பத்திரிகைகளில் வந்த செய்தியையே ட்விட்டரில் வெளியிட்டேன். இதில் சட்டவிரோதம் இல்லை’ என்று அதில் தெரிவித்திருந்தார்.

நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக பதில்அளிக்க காவல் துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.இதையடுத்து, வழக்கை வரும் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை வினோஜ் பி.செல்வத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.