தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை தள்ளிவைப்பதற்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

கரோனா மூன்றாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், நகர்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ’தினந்தோறும் 25 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி என அறிக்கை வருகிறது. கடந்த 15 நாட்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. இந்தநிலையில், தேர்தலின் போது வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க செல்வதால், வேட்பாளர்கள் மட்டுமல்ல வாக்காளர்களும் பாதிக்கப்படுவர்.

தொற்று பரவலை பேரிடராக அறிவித்துள்ள நிலையில், தேர்தல் நடத்த தற்போது உகந்த நேரமல்ல. அரசியல் சாசனத்தின்படி, பொது சுகாதாரத்தை பேணுவது அரசின் கடமை. எனவே, தற்போதைய நிலை சீராகும் வரை தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். மேலும், ஏற்கெனவே ஐந்து ஆண்டுகள் தேர்தல் நடத்தாத நிலையில், தற்போது தேர்தல் நடத்த அவசரம் இல்லை. எனவே, கரோனா மூன்றாவது அலை தணியும் வரை காத்திருக்கலாம். திருமணம், இறுதிச் சடங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும். குடியரசு தினத்தையொட்டி நடத்தப்பட வேண்டிய கிராமசபை கூட்டங்களும் கூட ரத்து செய்யப்பட்டுள்ளது’ என வாதிட்டனர்.

மேலும், பொதுத் தேர்தலை பொறுத்தவரை வாக்களிக்க இயலாத மாற்றுத் திறனாளிகள், முதியோர், கரோனா பாதித்தவர்களுக்கு தேர்தலில் பங்களிக்க வழிவகை செயப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் இதுபோன்ற விதிகள் இல்லை என்றும் வாதிட்டனர். அப்போது,குறுக்கிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் நடத்தப் போவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர். அரசியல் சட்டத்தை பின்பற்ற தவறியதால் தான் உச்ச நீதிமன்றம் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட தேதியில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அறிவிக்காவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பு எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தலில் கரோனா தடுப்பு விதிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடுவதாகவும், தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது எனவும் தெரிவித்தனர்.

மருத்துவமனைகளில் 2 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், பிரச்சாரத்துக்கு செல்லும் வேட்பாளர் மூன்று பேருக்கு மேல் செல்லக் கூடாது என கரோனா தடுப்பு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர். அப்போது மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் அறிவிப்பு வெளியிட தயாராக உள்ளதாகவும், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் அறிவிக்கப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அரசு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்றும், மாநில அரசுடன் கலந்து பேசிய பின்னர்தான் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்போது தமிழக அரசு தரப்பில், தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், நீதிமன்ற உத்தரவின்படி மாநில அரசு செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நான்கு மாதங்களில் தேர்தல் நடத்த கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டி, மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவாதத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவித்தனர். உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி நகர்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்கும்படி கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாகவும், அடிப்படை உரிமை, சட்ட உரிமைகள் தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்றாலும், நீதித்துறை ஒழுங்குபடி, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என விளக்கம் அளித்தனர்.

மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி தேர்தலை தள்ளிவைக்க கோரலாம் என்றும், அதற்கு எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்தனர். மேலும் மாநில தேர்தல் ஆணையம்தான் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவால் பாதிக்கப்பட்ட எவர் வேண்டுமானாலும் அங்கே அணுகலாம் என்றும், ஏற்கெனவே கரோனா தடுப்பு விதிகளை கடந்த டிசம்பர் 10-ஆம் தேதியே மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், தேர்தலை தள்ளிவைக்க மாநில தேர்தல் ஆணையம் கோரவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர். மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகவில்லை என்பதால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், தேர்தல் நடத்துவதில் தாமதத்தை கருத்தில் கொண்டு தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும் நீதிபதிகள் சுட்டுக்காட்டியுள்ளனர்.

மனுதாரர்கள் வாதத்தை ஏற்று தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்றும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளதாலும், பிரச்சாரத்துக்கு கட்டுப்பாடுகள், தனிமனித இடைவெளி விதிக்கப்பட்டுள்ளதாலும் அவற்றை முறையாக பின்பற்ற அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளதை கருத்தில் கொண்டு செயல்படவும் அறிவுறுத்தி உள்ளனர்.தேர்தலை தள்ளிவைக்கக் கூடாது என்ற மாநில அரசின் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். விதிமீறல் இருந்தால் நீதிமன்ற கவனத்துக்கு கொண்டு வர வேண்டும் என மனுதாரர்களுக்கு அறிவுறுத்தி வழக்குகளை முடித்துவைத்தனர்.

பொதுமக்கள் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், தேர்தல் 5 ஆண்டுகளுக்கு மேல் நடத்தப்படவில்லை. அதை தொடரக் கூடாது என்றும் அறிவுறுத்தினர். தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அரசியல் சாசன விதிகளை தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்புகள் புறக்கணிக்க கூடாது என்றும் அறிவுறுத்தினர். தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட 10 நாட்களுக்கு பின் வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.