கோயம்பேடு சந்தையில் முட்டைக்கோஸ், முள்ளங்கி, முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டம் தாளவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்படுகிறது. அப்பகுதிகளில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு அதிக அளவில் முட்டைக்கோஸ் வருகிறது. முட்டைக்கோஸ் விளைச்சல் அதிகரித்துள்ளதால், சந்தைக்கு வரத்தும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.5-க்கு விற்கப்படுகிறது. இதேபோன்று முள்ளங்கி விலையும் கிலோ ரூ.8 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் முருங்கைக்காய் கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கிலோ ரூ.10 ஆக விலை குறைந்துள்ளது.
மற்ற காய்கறிகளான தக்காளி, புடலங்காய், அவரைக்காய், உருளைக்கிழங்கு தலா ரூ.15,கருணைக்கிழங்கு, பெரிய வெங்காயம் ரூ.14, சாம்பார் வெங்காயம் ரூ.25, வெண்டைக்காய், கத்தரிக்காய், பாகற்காய், பீன்ஸ் தலாரூ.20, பீட்ரூட் ரூ.23 என விற்கப்பட்டு வருகிறது.
விளைச்சல் அதிகரிப்பு
முட்டைக்கோஸ், முள்ளங்கி விலை வீழ்ச்சி அடைந்திருப்பது குறித்து கோயம்பேடு சந்தை மொத்த வியாபாரிகள் கூறும்போது, “தற்போது முட்டைக்கோஸ் மற்றும் முள்ளங்கி விளைச்சல் அதிகமாக உள்ளது. அதனால் சந்தைக்கு வரத்தும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 2 வாரங்களுக்கு இதே நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றனர்.