சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி மாணவர்கள் மேலும் 60 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கு கடந்த சில நாட்களாக நடந்த பரிசோதனையில் 81 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. எம்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் மொத்தம் 1,417 மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் நேற்றுவரை இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு ஒருவாரம் விடுமுறை விடப்பட்டது.

இதனிடையே, இன்று எம்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் பயின்று வரும் மேலும் 60 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவர்களுடன் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141-ஐ எட்டியது. இன்று தொற்று உறுதிசெய்யப்பட்ட மாணவர்களில் சுமார் 90 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஏற்கெனவே, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு விடுதி மாணவர்களில் 4 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களுக்கு கரோனா:

அதே சென்னை குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் சுமார் 30 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 250-க்கும் அதிகமான ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ததில் 30 ஊழியர்களுக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்பேரில் தற்போது குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here