சென்னை: “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதை குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில், ” 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும், அரசும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள்” என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களே, தங்களது கனிவுமிகு பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. விருந்தோம்பலும் தன்மானமும் தமிழர்களின் இணைபிரியா இருபெரும் பண்புகள் ஆகும்! தொடர்ச்சியான உங்களது ஆதரவையும், இதுபோல இன்னும் பல உலக அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளைத் தமிழ்நாட்டுக்கு வழங்குமாறும் தங்களைக் கோருகிறேன்.யாதும் ஊரே யாவரும் கேளிர்.” இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.