“உண்மையான திராவிட மாடலுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லா வகையிலும் கனிவாகவும் இருப்பார், இரும்பாகவும் இருப்பார்” என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எங்களைப் பொறுத்தவரை திராவிட மாடல் என்பதை நாங்கள் தினம் தினம் நிரூபித்துக் கொணடிருக்கிறோம்.

நேற்றுகூட தமிழக முதல்வர், எந்தக் காலத்துக்கும் இல்லாத அளவுக்கு வட மாநிலங்களில்தான் கேள்விபட்டிருப்பீர்கள், 50 கோடி 100 கோடிகளில் திருப்பணிகள் என்று, முதன்முதலில் திருச்செந்தூருக்கு மேம்படுத்தப்பட்ட திருப்பணிகளுக்காக ரூ.300 கோடி செலவில், அத்திருக்கோயிலின் திருப்பணிகளை தொடங்கி வைத்துள்ளார். இதுதான் திராவிட மாடல்.

கலகத்தை உண்டாக்குவது, பிரச்சினைகளை உண்டாக்குவது, இனத்தால், மதத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்துவது அல்ல திராவிட மாடல். உண்மையான திராவிட மாடலுக்காக தமிழக முதல்வர் எல்லா வகையிலும் கனிவாகவும் இருப்பார், இரும்பாகவும் இருப்பார்” என்று அவர் கூறியுள்ளார்.