தூத்துக்குடியில் வெள்ளச் சேதங்களை பார்வையிட்ட பின்னர்நேற்று மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார். எட்டயபுரம் விலக்குப் பகுதியில் அவரது கார் சென்ற போது, தமிழ் பாப்திஸ்து தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர் பாரதியார் வேடமிட்டு சாலையோரம் நின்றிருந்தனர்.

அவர்களைப் பார்த்தவுடன் முதல்வர் ஸ்டாலின் தனது காரை நிறுத்தினார். மாணவர்கள் மகாகவி பாரதியாரின் ‘வந்தே மாதரம் என்போம்’ என்ற பாடலைபாடினர். இதனால் முதல்வர் மகிழ்ச்சியடைந்தார். தொடர்ந்து அவருக்கு கோவில்பட்டி கல்விமாவட்ட அலுவலர் சின்னராஜ், பள்ளி துணை ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் தமிழ் பாப்திஸ்து பள்ளி தலைமையாசிரியர் கென்னடி ஆகியோர், பாரதியார் படத்தை வழங்கினர்.

தொடர்ந்து, முதல்வர் குழந்தைகளை பார்த்து, ‘‘நல்லா படிக்கிறீங்களா, பாதுகாப்பா இருக்கீங்களா’’ என கனிவுடன் கேட்டார். பின்னர், தலைமையாசிரியரிடம் பள்ளியில் எத்தனை குழந்தைகள் படிக்கின்றனர். கரோனா ஊரடங்குக்கு பின்னர் மாணவர்கள் வருகை எப்படி உள்ளது ஆகியவற்றை கேட்டறிந்த முதல்வர், குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் எனக்கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது, கனிமொழி எம்.பி. உடனிருந்தார்.