முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருதை அவரது வீட்டுக்கே சென்று முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள ‘தகைசால் தமிழர்’ விருது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யாவுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில், அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், சவுந்திரராசன் ஆகியோர் நேற்று சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

‘தகைசால் தமிழர்’ விருதுக்காக தனக்கு வழங்கப்படும் ரூ.10 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்து விடுவதாக சங்கரய்யா அறிவித்துள்ளார். ‘உடல்நிலை காரணமாக அவர் இங்கு வந்து விருதைப்பெற வேண்டிய அவசியம் இல்லை.அவரது வீட்டுக்கே சென்று விருதை வழங்குகிறேன். அதற்கான தேதி, நேரத்தை பின்னர் தெரிவிக்கிறேன்’ என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக நிறைவேற்றாத வாக்குறுதிகள் ஏராளமாக உள்ளன. ஆனால், மத்தியஅரசுடன் கைகோத்துக் கொண்டு,நீட் தேர்வு ரத்து மற்றும் பெட்ரோல்,டீசல் விலை குறைப்புக்காக போராட்டம் நடத்துவது வேடிக்கை.கரோனா தடுப்புக்கு அதிக நிதிதேவைப்படுவதால், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்டதேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவதாக திமுக அறிவித்துள்ளது.