தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் தமிழக முதல்வர் நேற்று இரவு (புதன்கிழமை இரவு) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு காரில் தருமபுரிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பயணித்தார். இரவு 8.17 மணியளவில் தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை காவல் நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார்.

காவல் நிலையத்தில் உள்ள பொதுநாட்குறிப்பு, தினசரி பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்த அவர் நேற்றைய புகார் மனுக்கள் மீதான நடவடிக்கையையும் கேட்டறிந்தார்.

பின்னர் போலீஸாரிடம் பேசிய முதல்வரிடம், போலீஸாருக்கு வார விடுமுறை வழங்கப்பட்டிருப்பதும், இடிஆர் குறைப்பு கைவிடப்பட்டிருப்பதும் மிகவும் உதவியாக உள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

புகார் மனுக்களை விசாரிக்கும் முறை, முதல்வர் தனிப்பிரிவு மூலம் அனுப்பப்படும் புகார் மனுக்கள் மீதான விசாரணை முறை ஆகியவை குறித்தும் கேட்டறிந்தார். முதல்வருக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கைக்காக காவல் நிலையங்களுக்கு திருப்பி விடப்படும் மனுக்கள் மீதான விசாரணை முறை குறித்து முதல்வர் கேட்டபோது, இவ்வாறான மனுக்கள் மீது காவல் ஆய்வாளர் நிலையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி அதற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

சுமார் 10 நிமிட ஆய்வை முடித்துக் கொண்டு முதல்வர் புறப்பட்டபோது காவல் நிலைய வளாகத்தில் திரண்டிருந்த, போலீஸாரின் குடும்ப உறுப்பினர்களிடம் நலம் விசாரித்து விட்டு கிளம்பிச் சென்றார்.

இந்த ஆய்வின்போது, ஏடிஜிபி(சட்டம்-ஒழுங்கு) தாமரைக்கண்ணன், நுண்ணறிவுப்பிரிவு ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், சேலம் டிஐஜி மகேஸ்வரி, தருமபுரி எஸ்.பி கலைச்செல்வன், அதியமான்கோட்டை காவல் ஆய்வாளர் ரங்கசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.