தனது ஆதிக்கமிகுந்த அபார ஆட்டத்தால் ஸ்விஸ் ஓப்பன் 300 இறகுப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் வென்று நம் அனைவரையும் பி.வி. சிந்து மீண்டும் ஒரு முறை பெருமை கொள்ளச் செய்துள்ளார் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”தனது ஆதிக்கமிகுந்த அபார ஆட்டத்தால் ஸ்விஸ் ஓப்பன் 300 இறகுப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் வென்று நம் அனைவரையும் பி.வி. சிந்து மீண்டும் ஒரு முறை பெருமை கொள்ளச் செய்துள்ளார். இது இப்பருவத்தில் ஒற்றையர் பிரிவில் அவர் கைப்பற்றியுள்ள இரண்டாவது தொடராகும்.

அவர் மென்மேலும் வெற்றிகளைக் குவித்து நமது இளைஞர்களுக்கு உந்துவிசையாக விளங்க எனது வாழ்த்துகள்” என்று அவர் பதவிட்டுள்ளார்.

முன்னதாக சுவிஸ் ஒபன் பாட்மிண்டன் தொடரில் மகளிர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் நடைபெற்ற இத்தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் பூசனன் ஓங்பாம்ருங்பனை எதிர்த்து விளையாடினார்.

49 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-16, 21-8 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம்வென்றார். முதல் செட்டில் போராடிய பூசனன், 2-வது செட்டில் சிந்துவின் ஆக்ரோஷ ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.