நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம், தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்துவோம்” என்று திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவில் அவர் பேசியது: “திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தப்போது கரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்தது. ஆக்சிஜன், படுக்கை ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு நிலவியது. கரோனாவை கட்டுப்படுத்துவதில் திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதால் கரோனா 3-வதுஅலையை எளிதாக கடந்திருக்கிறோம்.

சட்டப்பேரவைத தேர்தல் பிரச்சாரத்தை சொந்த ஊரான திருவாரூரில் தொடங்கினேன். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தை சென்னைக்கு வெளியே கரூர் மாவட்டத்தில் தொடங்கியுள்ளேன். கரூர் மாவட்டத்திற்கும் திமுகவுக்கும் நெருங்கியத் தொடர்பு உள்ளது உங்களுக்கு தெரியும். கடந்த 1957-ம் ஆண்டு குளித்தலை தொகுதியில் வெற்றிப் பெற்றுதான் கருணாநிதி எம்எல்ஏ ஆனார்.

நீட் தேர்வு ரத்துக்கான சட்டப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பிய ஒரு வாரத்திற்குள் மீண்டும் நீட் தேர்வு ரத்து மசோதாவை நிறைவேற்றி மீண்டும் அனுப்பியிருக்கிறோம். இது அதிமுக அடிமை அரசு அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு.

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் உதயநிதிக்கு தெரியும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சொல்லியிருக்கிறார். அந்த ரகசியத்தை இங்கு சொல்கிறேன். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம். தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்துவோம். அதிமுக, பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார். கரூர் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்பட்ட 51,531 மனுக்களில் 50,772 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

கரூர் பிரச்சாரத்தில் மாநில மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உடனிருந்தார். கரூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 48 பேரும் பங்கேற்றனர்.