மனித வள மேலாண்மைத் துறையின் கீழ் ரூ.2 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் 6 அலுவலகங்களை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2021-22ம் ஆண்டிற்கான மனித வள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையில், புதியதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய வருவாய் மாவட்டங்களில் ஆறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மனித வள மேலாண்மைத் துறை சார்பில் கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 வருவாய் மாவட்டங்களில் 2 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று (22.1.2022) தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் இயக்குநர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.