சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வரின் நல் ஆளுமை விருது, மாநில இளைஞர் விருது உள்ளிட்ட விருதுகளுடன், கரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர், செவிலியர், காவலர்கள், தூய்மைப் பணியாளர் உட்பட 6 துறைகளின் ஊழியர்கள் 33 பேருக்கு தங்கப் பதக்கத்தையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நேற்று தேசியக் கொடியை ஏற்றிவைத்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு விருதுகளை வழங்கினார். அதன் விவரம்:

முதல்வரின் நல் ஆளுமை விருது, கிண்டி அரசு கரோனா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் நாராயணசாமி, நில நிர்வாக இணை ஆணையர் ஜெ.பார்த்திபன், சென்னை மாநிலக் கல்லூரிக்கு வழங்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை புரிந்தவர்களுக்கான விருது, திருச்சி ஹோலிகிராஸ் சர்வீஸ் சொஸைட்டி, சேலம் டாக்டர் பத்மப்ரியா, திருநெல்வேலி சமூகப் பணியாளர் மரிய அலாசியஸ் நவமணி, சென்னை ‘வீ.ஆர்.யுவர் வாய்ஸ்’ நிறுவனம், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்பட்டது. சமூக நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கான அவ்வையார் விருது, ஈரோடு மருத்துவர் டி.சாந்திதுரைசாமி, தூத்துக்குடி திருநங்கைகிரேஸ்பானுவுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி, சிறந்த நகராட்சிகளாக 1, 2, 3-ம் பரிசுகள் பெறும்ஊட்டி, திருச்செங்கோடு, சின்னமனூர் நகராட்சிகள், சிறந்த பேரூராட்சிகளாக 1, 2, 3-ம் பரிசுகள் பெறும்திருச்சி மாவட்டம் கள்ளக்குடி, கடலூர் மாவட்டம் மேல்பட்டம்பாக்கம், சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் பேரூராட்சிகளுக்கு சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வர் விருது வழங்கப்பட்டது.

முதல்வரின் மாநில இளைஞர் விருதுகள், ஆண்கள் பிரிவில் சென்னை அரவிந்த் ஜெயபால், திருவாரூர் மாவட்டம் என்.பசுருதீன், நீலகிரி மாவட்டம் எஸ்.ரஞ்சித்குமார், பெண்கள் பிரிவில் திண்டுக்கல் மாவட்டம் க.மகேஸ்வரி, கடலூர் மாவட்டம் ஜே.அமலா ஜெனீபர் ஜெயராணி, சென்னை மாவட்டம் ச.மீனாவுக்கு வழங்கப்பட்டது. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அரசு மருத்துவமனைகளுக்கான விருது, சென்னை ராஜீவ் காந்தி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கடலூர் அரசு தலைமை மருத்துவமனை, ராமநாதபுரம் சாயல்குடி அரசு சமூக சுகாதார நிலையத்துக்கு வழங்கப்பட்டது.

மருத்துவம், காவல் உள்ளிட்ட 6 துறைகளில் கரோனா தடுப்பு பணியை சிறப்பாக செய்த சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை கதிரியக்கவியல் இயக்குநர் டாக்டர் ஆர்.ரவி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர் எஸ்.காளீஸ்வரி, கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஆர்.சுகந்தி, சேலம் ஓமலூர் அரசு மருத்துவமனை செவிலியர் ப.கோமதி, ஈரோடு பவானி அரசு மருத்துவமனை ஆய்வக நுட்புநர் கே.அம்மாப்பொண்ணு, வேலூர் துணை இயக்குநர் அலுவலக கரோனா தொடர்பு அலுவலர் எம்.ஆதித்யா, தூத்துக்குடி அரசுஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகநுட்புநர் ஜே.ரெஸ்ட்லின், திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய உதவி மருத்துவ அலுவலர் வி.விக்ரம்குமார், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி யோகா, இயற்கை மருத்துவம் உதவி மருத்துவ அலுவலர் வி.பி.ஹேமாம்பிகா, தருமபுரி மாவட்டம் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் எல்.பிரபு, மதுரை பேரையூர் ஆய்வாளர் சி.ராஜ சுலோச்சனா, திருப்பூர் நகரம் வடக்கு காவல் நிலையதலைமைக் காவலர் பி.கல்யாணபாண்டி, தீயணைப்பு, மீட்புப் பணிதுறையில் வடசென்னை கே.இதயக்கண்ணன், கன்னியாகுமரி எம்.சண்முகசுந்தரம், திருச்சி கே.முகமதுகான், வாலாஜாபேட்டை தூய்மைப்பணியாளர் வி.சுவர்ணலதா, ராணிப்பேட்டை தட்டச்சர் ஆர்.ஜோதிலட்சுமி, சென்னை மாநகராட்சி மலேரியா தடுப்பு பணியாளர் கே.மூர்த்தி,தூய்மை பணியாளர் என்.மல்லிகா,லால்குடி பேரூராட்சி தூய்மை பணியாளர் எஸ்.மாரியம்மாள், களப்பணி உதவியாளர் த.தமிழ்மொழி உள்ளிட்ட 33 பேருக்கு தங்கப் பதக்கம் மற்றும் நன்மதிப்பு சான்றிதழை வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவப்படுத்தினார்.