“தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை முடக்கப் பார்க்கிறார். தமிழக அரசும், காவல்துறையும் துரோகிகளுக்கு துணைநின்று, அதிமுகவினர் கோயிலாக வணங்கக்கூடிய எம்ஜிஆர் மாளிகையை பூட்டி சீல் வைத்துள்ளனர். இதனால் ஒவ்வொரு தொண்டனின் உள்ளமும் கொதித்துக் கொண்டிருக்கிறது” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகக் கூறியுள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர், சொந்த ஊரான சேலத்திற்கு அவர் இன்று (ஜூலை 15) செல்லும் வழியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சேலம் மாவட்டம் தலைவாசலில் அதிமுக சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பின்போது, அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பேசிய அவர், “அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு யார் யாரெல்லாம் தடையாக இருந்தார்களோ, அந்த தடைகற்கள் அத்தனையும், இன்று உடைத்தெறியபட்டிருக்கின்றன. தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை முடக்கப் பார்க்கிறார். தமிழக அரசும், காவல்துறையும் துரோகிகளுக்கு துணைநின்று, அதிமுகவினர் கோயிலாக வணங்கக்கூடிய எம்ஜிஆர் மாளிகையை பூட்டி சீல் வைத்துள்ளனர். இதனால் ஒவ்வொரு தொண்டனின் உள்ளமும் கொதித்துக் கொண்டிருக்கிறது” என்று அவர் கூறினார்.

சேலத்தில் இபிஎஸ் பேசியது: “சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில், அதிமுகவும் கூட்டணியில் இருந்த பாமகவும் சேர்ந்து 10 இடங்களில் வென்றது. சேலம் அதிமுகவின் கோட்டை. முதல்வர் ஸ்டாலின் அவர்களே, ஆட்சி உங்களுடையதாக இருக்காலம். ஆனால், சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை அதிமுகவினுடையது.

தமிழகத்தில் 234 தொகுதிகள் இருந்தாலும், சேலம் மாவட்டத்தில் இருக்கின்ற 10 தொகுதிகளை வென்றிருக்கிறோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் ஆசியுடன் சேலத்தை சேர்ந்த ஒருவர் தமிழகத்தின் முதல்வராக இருந்துள்ளேன். சாதாரண கிளைக் கழக செயலாளராக இருந்த நான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வாகியிருப்பதும் சேலம் மாவட்டத்திற்கு கிடைத்துள்ள பெருமை. இந்த மாவட்டத்தில் இருந்து சென்று முதல்வர் பதவியையும் பிடித்தோம், கட்சியின் உச்சபட்ச பதவியையும் பிடித்துள்ளோம்” என்று அவர் கூறினார்.