கடலூர் மாவட்டத்தில் வெள்ள சேதப் பகுதிகளைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 9 நாட்களாகப் பெய்த கடும் மழையின் காரணமாக சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கின. தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று (நவ.13) கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் வெள்ள சேதப் பகுதிகளைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குறிஞ்சிப்பாடி பகுதியில் அரங்க மங்கலம் ஊராட்சியில் மாருதி நகரில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அதே வட்டத்தில் உள்ள அடூர் அகரம் பகுதியில் வெள்ள நீரில் மூழ்கிய விளைநிலங்களைப் பார்வையிட்டு விவசாயிகளிடம் குறை கேட்டு மனுக்களைப் பெற்றார். தொடர்ந்து அப்பகுதியில் வேளாண் துறை, பொதுப்பணித்துறை சார்பில் வைக்கப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பற்றிய படக் கண்காட்சியைப் பார்வையிட்டார்.

முதல்வருடன் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு எம்.பி., மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சிதம்பரத்தில் தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவருந்திவிட்டு அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன், ரகுபதி, மெய்யநாதன், அன்பில் மகேஸ் ஆகியோருடன் மயிலாடுதுறை மாவட்டப் பகுதிகளில் வெள்ள சேதத்தைப் பார்வையிடப் புறப்பட்டுச் சென்றார்.

முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி கடலூர், குறிஞ்சிப்பாடி ,சிதம்பரம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது,