அபிநந்தன் வர்த்தமான் வீர் சக்ரா விருது பெற்றதற்குப் பெருமகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன், இந்திய விமானப் படையில் விங் கமாண்டராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு ஆரம்பத்தில் காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இந்தியப் போர் விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் ஊடுருவி தீவிரவாத முகாம்களை அழித்தன. 2019-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை வீரர் அபிநந்தன் மிக் 21 ரக விமானத்தில் விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தினார்.

இந்தத் தாக்குதலின்போது பாகிஸ்தான் பகுதிக்குள் அபிநந்தன் சென்ற விமானம் விழுந்தது. பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட அபிநந்தன் பின்னர், மத்திய அரசின் முயற்சியால் உலக நாடுகள் பாகிஸ்தானுக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டார். பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்த அபிநந்தனுக்கு அவரது வீரத்தைப் பாராட்டி வீர் சக்ரா விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் குழு கேப்டனாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அபிநந்தனுக்கு இன்று வீர் சக்ரா விருது வழங்கினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் அபிநந்தனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ” ‘என் வயிறு புலி தங்கியிருந்த குகை. என் மகன் போர்க் களத்தில்தான் இருப்பான்’ என்று புறநானூறு பாடிய தமிழ் மண்ணின் வீரம் செறிந்த மகனாகச் செருக்களம் சந்தித்துத் தாயகம் காத்த அபிநந்தன் வர்த்தமான் வீர் சக்ரா விருது பெற்றதற்குப் பெருமகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.