கண்ணகி நகர் அரசுப் பேருந்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், பேருந்தி பயணித்த பெண்கள் சிலர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
தமிழகத்தில் கரோனா தடுப்பூசியைத் தகுதியுள்ள அனைவருக்கும் செலுத்தும் வகையில், கோவிட் தடுப்பூசி முகாம்கள் கடந்த வாரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றன. இதுவரை 5 கட்ட முகாம்கள் நடைபெற்றுள்ள நிலையில், 6-ம் கட்ட முகாம், இன்று (அக். 23) மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கம், கண்ணகி நகரில் உள்ள அரசு இ-சேவை மையத்தில் உள்ள கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமைப் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரங்கள் குறித்துக் கேட்டறிந்தார்.
அதை முடித்துக் கொண்டு திரும்பிய முதல்வர், திடீரென காரில் இருந்து இறங்கினார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த கண்ணகி நகர் அரசுப் பேருந்தில் ஆய்வு மேற்கொண்டார். அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் என்று திமுக தலைமையிலான அரசு அறிவித்துள்ள நிலையில், பேருந்துப் பயணம் குறித்து, அதில் பயணித்த பெண்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
அப்போது பேருந்தில் இருந்த பலரும் முதல்வரைப் பார்க்க முண்டியடித்தனர். ‘முதல்வர் வருவார், அவரவர் இருக்கையில் அமருங்கள்’ என்ற அறிவுறுத்தலுக்குப் பிறகு பயணிகள் அனைவரும் இருக்கைகளில் அமர்ந்தனர். மேலும் சில பெண்கள் முதல்வருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.