வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்ற நடிகை நயன்தாரா சட்ட விதிகளை மீறியிருப்பதாக தகவல் பரவியுள்ளது. கடந்த ஜூன் 9ம் தேதி நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மாலை, தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக விக்னேஷ் சிவன் அறிவித்தார். சமீபத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், ஸ்பெயினுக்கு சென்றனர். அங்குதான் வாடகை தாயை சந்தித்து இது தொடர்பாக ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும் அந்த பெண் மூலம் இரட்டை குழந்தை பிறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜூலை 15, 2019 அன்று மக்களவையில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு, வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) மசோதா ஒரு தேர்வுக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. மசோதாவை முழுமையாக மறுபரிசீலனை செய்த பிறகு, பிப்ரவரி 5, 2020 அன்று நிலைக்குழு முன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், 2021 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில், இரு அவைகளும் மசோதாவை நிறைவேற்றின. இது ஜனாதிபதியால் கையெழுத்திடப்பட்டு 2022 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழ், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்குத் தகுதி மற்றும் இன்றியமையாததற்கான சான்றிதழ்களை தம்பதிகள் வாங்க வேண்டும்.  திருமணமாகி ஐந்தாண்டுகள் ஆகியிருக்க வேண்டும்.

வாடகைத் தாய் தம்பதியரின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும், வாடகைத் தாய்க்கான மருத்துவ மற்றும் உளவியல் தகுதிக்கான சான்றிதழையும் அவர் வைத்திருக்க வேண்டும்.தம்பதியில் ஒருவர் குழந்தைப்பேறுக்கு தகுதியற்றவராக இருக்க வேண்டும். ஒரு பெண் ஒரு முறைதான் வாடகைத் தாயாக இருக்க முடியும். வாடகை தாய்க்கு 16 மாத கால காப்பீடு எடுத்திருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் இந்த சட்டத்தில் உள்ளன.இந்த விதிமுறைகள் எதையும் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடைப்பிடிக்கவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என சட்டத்தில் உள்ளது. ஆனால் நயன்தாராவுக்கு திருமணமாகி 5 மாதங்கள் கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.