சீனாவில் மீண்டும் கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவுகிறது. இதன் காரணமாக 5 மாகாணங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில்கரோனா பரவல் கண்டறியப்பட் டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் பரவி, கடந்த 2 ஆண்டுகளாக அடுத்தடுத்து கரோனா அலைகள் உருவாகி கொண்டிருக்கின்றன.

சீனாவில் கரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அந்த நாட்டு அரசு கூறிவந்த நிலையில் ஜியாங்சூ, செச்சுவான், லியானிங், ஹூனான், ஹூபெய் உள்ளிட்ட 5 மாகாணங்களில் தற்போது கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது.இந்த மாகாணங்களில் வைரஸ் பரவலைகட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் பெய்ஜிங் உட்பட 13 நகரங்களிலும் வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது.

ஜியாங்சூ மாகாண தலைநகர் நான்ஜிங்கில் ஊரடங்கு அமல்செய்யப்பட்டுள்ளது. அந்த நகரில்விமான சேவை உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டி ருக்கிறது. சுமார் 41,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. நகரில் வசிக்கும் சுமார் 93 லட்சம் மக்களும் கண்டிப்பாக கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்த 2019-ல் வூஹானில் கரோனா வைரஸ் பரவியது போன்ற சூழ்நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. கரோனாவின் டெல்டா வகை வைரஸ் பரவி வருகிறது. இதை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன” என கூறப்பட்டுள்ளது.

சீனாவில் 52.9 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. எனினும், தடுப்பூசி போட்டவர்கள் கரோனா டெல்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பும் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

#Metro_People #Corona #Covid #Covid19 #China #news #NewsUpdates