கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, உலா வரும் கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளுக்கு தன் உடையில் ஒளித்து வைத்திருக்கும் இனிப்புகளை, தேடிப்பிடித்து வழங்குவது குழந்தைகளை குதூகலப்படுத்தும் விஷயமாகும். அவரது உருவம் குழந்தைகளுக்கு பிடித்த ஒன்றாகிவிட்டதால், உலகமெங்கும் கிறிஸ்துமஸ் தாத்தா என்றழைக்கப்படும் சாண்டா கிளாஸ் வேடம் தரிக்கும் தாத்தாக்களுக்கு ரசிகர் பட்டாளம் அனைத்து ஊர்களிலும் உண்டு.

குறிப்பாக குழந்தைகள் பட்டாளம் தான்! கிறிஸ்துமஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ் தான். அடர்ந்து வளர்ந்த வெள்ளைதாடி, வெள்ளை பார்டர் வைத்த சிகப்பு நிற வெல்வெட் அங்கி அணிந்த சிரித்த முகம், இவற்றோடு முதுமையைப் பிரதிபலிக்கும் உலமைப்புடன் வசீகரமாக வலம் வருபவர் கிறிஸ்துமஸ் தாத்தா. ரோம் சாம்ராஜ்யத்தின் பதாரியா பகுதியில் லைசியா துறைமுகத்தில் பிறந்தவர் நிகோலஸ். இளம் வயதில் பாலஸ்தீனத்துக்கும் எகிப்துக்கும் பயணம் மேற்கொண்டார். மீண்டும் லைசியா திரும்பிய நிகோலஸ், கிறிஸ்தவ பிஷப் பதவியை ஏற்றார்.

ரோம் நகர பேரரசன் டயோக்ளீஸ் காலத்தில் கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்டபோது, பிஷப் நிக்கோலஸும் சிறையில் தள்ளப்பட்டார். ஆனால், கால மாற்றத்தால் பேரரசர் கான்ஸ்டான்டின் காலத்தில் விடுதலை செய்யப்பட்டார். அவர் இறந்த பின்னர் அவரது சடலம் மைரா என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மக்களிடம் அவர் காட்டிய கருணை, அன்பின் காரணமாகவும் அவரது தயாள குணம் காரணமாகவும் அவரது கல்லறைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். 6-ம் நூற்றாண்டுக்குள் மக்களிடம் அவரது கல்லறை மிகவும் பிரபலமாகிவிட்டது.

மைரா பகுதிக்கு வந்த இத்தாலிய மாலுமிகள், நிகோலஸின் கல்லறையிலிருந்து அவரது நினைவுப் பொருட்களை இத்தாலியின் பாரி நகருக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். அதனால், ஜரோப்பா முழுவதிலும் அவரது புகழ் பரவியது. டச்சு யாத்திரிகர்கள் மூலமாக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கும் அவரது புகழ் பரவியது. செயின்ட் நிகோலஸ் என்பது டச்சு மொழியில் சின்டர்க்ளாஸ் என்று மருவியது. பின்னர் ஆங்கிலம் பேசும் மக்கள் அவரை சான்டா கிளாஸ் என அன்புடன் அழைத்தனர்.

சாண்டா கிளாஸின் உருவம் ஒரு வேலை யாளை மாதிரியாகக் கொண்டு வரையப்பட்டதாம். அந்த வேலையாளின் அழகிய சிவந்த கன்னங்கள், பழுப்பு நிறத் தாடி, சிறிய வாய், பெருத்த தொப்பை, சிவப்பு நிற அழகிய மேலாடை, பனிக்கால தொப்பி, தோளில் ஒரு மூட்டை இவையெல்லாம் ஒன்று திரண்ட உருவம் தான் நாம் பார்த்து அகம் மகிழும் சாண்டா கிளாஸ். புனிதர் நிகோலஸ் காலத்தில் பிஷப்புகள் அணிந்திருந்த சிவப்பு – வெள்ளை அங்கியே கிறிஸ்துமஸ் தாத்தாவின் உடையாகிவிட்டது. அப்போது முதல் உலகம் முழுவதும் அன்பின் திருவுருவமாக கிறிஸ்துமஸ் தாத்தா உலா வருகிறார்.