”ஆடை என்பது அவரவர் விருப்பம்” என்று மதுரை ஹிஜாப் பிரச்சினை குறித்து தமிழக தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 9 மணி நிலவரப்படி சராசரியாக 8.21% வாக்குப்பதிவாகியுள்ளது. இதில் மாநகராட்சிகளில் 5.78%, நகராட்சிகளில் 10.32%, பேரூராட்சிகளில் 11.74% வாக்குப்பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

அப்போது அவரிடம் மதுரை ஹிஜாப் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பேசிய அவர், ”வாக்குப்பதிவுக்கு என்ன ஆடை அணிந்து வர வேண்டும் என்பது அவரவர் விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது. சம்பந்தப்பட்ட பாஜக பூத் முகவர் அப்புறப்படுத்தப்பட்டு அக்கட்சி சார்பில் வேறு ஒருவர் முகவராக அமர்த்தப்பட்டுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது” என்றார்.

மதுரையில் நடந்தது என்ன? – மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 8-வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் மக்கள் வாக்களித்துக் கொண்டிருந்தனர். அப்போது சில முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்துவந்தனர். அந்தப் பெண்களை முகம் தெரியும்படி ஹிஜாபை அகற்றச் சொல்லி பாஜக பூத் முகவர் கிரிராஜன் வலியுறுத்தினார். பாஜக முகவரின் செயலுக்கு மற்றக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் சர்ச்சையை ஏற்படுத்திய முகவர் அப்புறப்படுத்தப்பட்டார். அவருக்குப் பதிலாக அக்கட்சியின் வேறொரு முகவர் பணியமர்த்தப்பட்டார்.