‘கோப்ரா’ படத்தில் விக்ரம் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோப்ரா’. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் பல கெட்டப்களில் நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு முன்பே இப்படத்தின் டீஸரைப் படக்குழு வெளியிட்டிருந்தது. கரோனா முதல் அலையின்போது, ரஷ்யாவில் சில முக்கியமான காட்சிகளை ‘கோப்ரா’ படக்குழு படமாக்கி வந்தது. அப்போது ரஷ்யாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், படப்பிடிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு இந்தியா திரும்பியது படக்குழு. அதன் பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் ரஷ்யா சென்று படப்பிடிப்பைப் படக்குழு நடத்தியது. அதன்பிறகு சென்னை திரும்பிய படக்குழு மீதமிருக்கும் காட்சிகளைப் படமாக்கி வந்தது.

இப்படம் நிறைவடையும் முன்பாகவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘மகான்’ படத்தில் விக்ரம் நடித்து முடித்துவிட்டார். அப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க விக்ரம் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் ‘கோப்ரா’ படத்தில் விக்ரம் தொடர்பான காட்சிகள் நேற்று (ஜன.05) நிறைவடைந்தன. இது தொடர்பான புகைப்படங்களை இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

‘கோப்ரா’ படத்தில் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here