கோவை சம்பவ வழக்கில் உயர்மட்ட பயங்கரவாத சதி திட்டத்தில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டது” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கவலை தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் நவக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான தங்கும் விடுதிகள் கட்டிட திறப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதில் இருந்து சில கருத்துகள், தமிழக ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ட்விட்டர் பதிவுகளில், “கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ-விடம் ஒப்படைப்பதில் நான்கு நாட்கள் காலதாமதம் ஏற்பட்டுள்ளதற்கும், உயர்மட்ட பயங்கரவாத சதித்திட்டத்தில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டதற்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கவலை தெரிவித்தார். சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே கார் குண்டுவெடிப்பை தீவிர பயங்கரவாதத் தாக்குதல் சதி என்று நிறுவிய தமிழக காவல் துறையை தமிழக ஆளுநர் பாராட்டினார்.

பிஎஃப்ஐ மீதான தடை மற்றும் நிர்வாகத்தின் வழக்கமான பதிலைத் தொடர்ந்து 5 நாட்களுக்கும் மேலாக மாநிலத்தில் நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுவெடிப்பு தாக்குதல்களை ஆளுநர் நினைவு கூர்ந்தார்.

பயங்கரவாதத்தில் அரசியல் வேண்டாம் என்றும், பயங்கரவாதிகள் தேச விரோதிகள் என்றும், யாருக்கும் நட்பு இல்லை என்றும், அவர்களிடம் தயவு காட்டக் கூடாது என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்” என்று அந்த ட்விட்டர் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.