கோவை: கோவையில் தனியார் மருத்துவமனையில் தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் மருத்துவர்கள் உட்பட 5 பேரை கோவை மாநகர சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

கோவை சத்தி சாலை – நூறடி சாலை சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் உரிமையாளரான ராமச்சந்திரன் (75), கடந்த 2017-ம் ஆண்டுமருத்துவமனையை சென்னையைச் சேர்ந்த மருத்துவர் உமாசங்கருக்கு குத்தகைக்கு விட்டுள்ளார். அவர் மருத்துவமனையை சீரமைத்து புதிய பெயர் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில், வாடகைத் தொகை பாக்கி விவகாரம் காரணமாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 2020-ம்ஆண்டு டிசம்பர் மாதம் 20 பேர் கொண்ட கும்பல் மருத்துவமனையின் உள்ளே நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி, மருத்துவமனையின் பெயர் பலகையை அகற்றி, நோயாளிகளை வெளியேற்றினர். இதுதொடர்பாக, உமாசங்கர் தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால், வாடகைத் தொகை நிலுவை விவகாரம் தொடர்பாக மருத்துவர் ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், மாநகர குற்றப்பிரிவு போலீஸார் மருத்துவர் உமாசங்கர், நிர்வாகி மருதவாணன் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

அதன் பின்னர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் துடியலூர் அருகே கண்ணப்பன் நகரில் நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த கார் மோதியதில் மருத்துவர் உமாசங்கர் உயிரிழந்தார். இதற்கிடையே, மருத்துவமனை தாக்கப்பட்ட வழக்கு கடந்த ஆண்டு கோவை மாநகர சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு போலீஸார் விசாரித்து வந்தனர்.

இதுதொடர்பாக , மருத்துவ மனையின் உரிமை யாளர் ராமச்சந்திரன் (75), உதவியாளர் முருகேஷ்(47), கார் ஓட்டுநர் பழனிசாமி, மருத்துவர் காமராஜ், கூலிப்படையைச் சேர்ந்த ரத்தினபுரியைச் சேர்ந்த மூர்த்தி(45) ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர். 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.