ராகுல் காந்தியை ராமருடன் ஒப்பிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை எனும் பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவரது யாத்திரை டெல்லியை அடைந்த நிலையில், தற்போது யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் மேற்கொண்டு வரும் யாத்திரை குறித்து குறிப்பிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், பகவான் ராமரைப் போல தெய்வீக குணத்துடன் ராகுல் காந்தி இருப்பதாகக் குறிப்பிட்டார். வட மாநிலங்களில் மக்கள் குளிரில் நடுங்கும் நிலையில், ராகுல் காந்தி வெறும் டி.ஷர்ட் அணிந்து யாத்திரை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

சல்மான் குர்ஷித்தின் இந்தப் பேச்சுக்கு பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாடியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஊழல் வழக்கில் சிக்கி, நீதிமன்றம் வழங்கிய பிணை காரணமாக தற்போது வெளியே இருப்பவர் ராகுல் காந்தி. அவரை ராமபிரானுடன் ஒப்பிடுவது கடும் கண்டனத்திற்கு உரியது. ஓட்டுக்காக காங்கிரஸ் எத்தகைய அரசியலையும் செய்யும் என்பதற்கு இது ஒரு உதாரணம். சல்மான் குர்ஷித்தின் பேச்சு அப்பட்டமான முகஸ்துதி.

தேர்தல் வந்தால் ராகுல் காந்தி நயவஞ்சகமாக தன்னை இந்து என கூறிக்கொள்வார். இரட்டை வேடம் போடுவது காங்கிரஸ் கட்சியின் அடிப்படை குணம். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோரை, அவர்களது கேபினெட் அமைச்சரவையே பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரைத்தது. ராஜீவ் காந்திக்குக் கூட 1991-லேயே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால், சர்தார் வல்லபாய் படேல், பி.ஆர். அம்பேத்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களுக்கு காங்கிரஸ் உரிய மரியாதை அளிக்காதது ஏன்? அம்பேத்கருக்கு 1990-லும், படேலுக்கு 1991-லுமே பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது” என தெரிவித்தார்.