நீரில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் இரா.முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு இன்று வெளியிட்ட அறிக்கையில், “ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.ஆறுமுகம், நா.பெரியசாமி (விவசாயத் தொழிலாளர் சங்கம்), எஸ்.குணசேகரன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்) ஆகியோர் நேற்று மாலையில் முதல்வரை நேரில் சந்தித்து, தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், நிவாரண நடவடிக்கைகள் குறித்து முறையிட்டதுடன் கீழ்க்கண்ட கோரிக்கை விண்ணப்பம் அளித்துள்ளனர்.

விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட முதல்வர், தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை எடுத்துக் கூறினார்.

மத்திய அரசிடம் இருந்து பேரிடர் நிதி ஏதேனும் வந்ததா என்று கேட்டபோது, இன்னும் வரவில்லை என்று தெரிவித்தார். இருப்பினும் அரசு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு அதிகபட்சம் என்ன செய்ய இயலுமோ அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகக் கூறினார். மேலும் மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியிலான கிளர்ச்சி நடவடிக்கைகளில் சட்ட வரம்புக்கு உட்பட்டு நடத்துகிறபோது அதில் பங்கேற்பவர்கள் மீது வழக்குப் போடும் முறையைக் கைவிட வேண்டும். கடந்த ஆட்சியில் கோவை மாநகரத்தில் குடிதண்ணீர் விநியோக உரிமையை அந்நிய நிறுவனமான சூயஸ் பன்னாட்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பதை எதிர்த்து திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் எம்.பி. தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 90 பேர் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. இவ்வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

கீழ்க்கண்ட விண்ணப்பம் முதல்வரிடம் நேரில் வழங்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை இயல்பு நிலைக்கு மாறாக மிக அதிக அளவில் தொடர் கனமழையாக பெய்ததால் தமிழ்நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகளும், சேதாரங்களும் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளன. இருப்பினும் விவசாயிகளின் பயிர் இழப்பீடுகளுக்கு போதுமான இழப்பீடு கிடைக்காததால் குறிப்பாக தாளடி பயிர்கள் சாகுபடி செய்த நிலையிலேயே இழந்துவிட விவசாயிகள் மீளமுடியாத துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அண்மையில் சில நாட்களாகப் பெய்யும் தொடர்மழையால் காவிரி பாசனப் பகுதிகளில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன. இப்பயிர்கள் தண்ணீர் வடியும்போது சேறு சகதியில் படிந்து நெற்கதிர்கள் முளைப்பதுடன் அறுவடை செய்ய இயலாமல் பெரும் சேதத்திற்கு உள்ளாகும் என்பதைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

தொடர் கனமழையால் காவிரி பாசன மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளைக் கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், விவசாயத் தொழிலாளர்களுக்கு ரொக்கப் பண உதவியாக குடும்பத்திற்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கவும் வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். இயற்கை பேரிடர் குறித்து மத்திய அரசின் உயர்நிலை அதிகாரிகள் கள ஆய்வு செய்து திரும்பி பல வாரங்கள் ஆன பின்பும், எந்தத் தகவலும் வெளியிடப்படாதது தமிழ்நாட்டை வஞ்சிக்கும் போக்காகும். மத்திய அரசின் இந்த அணுகுமுறைக்கு எதிராக மக்கள் உணர்வுகளை பிரதிபலித்து ஒன்றிய அரசுக்கு வலுவான அழுத்தம் கொடுத்து, பேரிடர் நிவாரண நிதி பெற்று விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் துயர் துடைக்கும் நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.