கீழ்பவானி வாய்க்கால் உடைப்புக்கு நீர்வளத்துறையின் மெத்தனப்போக்கே காரணம். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு ஏக்கருக்கு ரூ.10,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில கங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி (எல்பிபி) வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. நடப்பாண்டு முதல் போக பாசனத்திற்காக ஆகஸ்ட் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறந்த சில தினங்களிலேயே பெருந்துறை அருகே வாவிக்கடை பகுதியில் அடுத்தடுத்து 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. பிறகு நசியனூர் பகுதியிலும், கடந்த அக்டோபர் மாதம் சத்தியமங்கலம், செண்பகபுதூர் மாரப்பநகர் பகுதியிலும் என 4 இடங்களில் கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு சரிசெய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 10-ம் தேதி பவானிசாகர் அணையில் இருந்து செல்லும் எல்பிபி வாய்க்காலின் 59.6 வது கிலோ மீட்டரில் பெருந்துறை அடுத்துள்ள ஈரோடு சாலை, வாய்க்கால் மேடு பகுதியில் மாலை 5 மணி அளவில் வாய்க்காலின் மேற்புறக் கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு அந்தப் பகுதியில் உள்ள வீடு மற்றும் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனால் அப்பகுதிகளில் பயிரிடப்பட்ட 500 ஏக்கர் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மஞ்சள், நெற்பயிர்கள் மூழ்கியது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மோட்டார் மற்றும் மின்சாதனப் பொருட்கள் பழுதடைந்தது. பின்பு உடைப்பு சரிசெய்யப்பட்டு 15 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தலைமை கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிணறு இல்லாத பகுதிகளில் நடப்பட்ட நெற்பயிர் ஆங்காங்கே பாதிப்புக்குள்ளானது. உடைப்பிற்குப் பிறகு ஏற்பட்ட வெள்ள நீர் பரவலாக பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி பெரும் சேதத்தை விளைவித்துள்ளது.

இதனால் ஏற்பட்டிருக்கும் சேதத்தை மதிப்பிட்டு இழப்பீடு கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அரசுக்கு உண்டு. ஆனால் இதுவரை இழப்பீடு கொடுக்கப்படவில்லை. இது நீர்வளத்துறையின் மெத்தனப்போக்கையே காட்டுகிறது. இந்த உடைப்பிற்கும் சேதத்திற்கும் நீர்வளத்துறையே முழு பொறுப்பு. மொத்தத்தில் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு இருக்கின்றார்கள். தங்களுக்கு வாக்களிக்காத காரணத்திற்காக ஆளும் திமுக அரசு கொங்கு மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

எனவே, தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 10,000 இழப்பீடு வழங்க முன்வர வேண்டும். அவ்வாறு வழங்காதபட்சத்தில், விவசாயிகளின் எதிர்ப்பை இந்த அரசு எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதை உணர்ந்து இனியாவது விவசாயிகளை வஞ்சிக்காமல் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.