தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்ட அரசுப் பள்ளி சமையலறையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து உயிரிழந்த சமையல் உதவியாளர் குடும்பத்துக்கு இழப்பீடு கோரும் மனு மீது 12 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி தெற்கு சிலுக்கன்பட்டியைச் சேர்ந்த பெ.அந்தோணிசாமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: ”நான் லாரி ஓட்டுநராக பணிபுரிகிறேன். என் மனைவி செல்வி (43). எங்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். மனைவி செல்வி தெற்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் சமையல் உதவியாளராக 27 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 1.5.2013-ல் செல்வி பள்ளி பழைய சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது புதிதாக கட்டப்பட்டு வரும் சமையறை கட்டிடத்தின் சன்சைடு லாப்டு இடிந்து செல்வியின் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 5.5.2013-ல் இறந்தார்.

புதிய சமையறை கட்டிடம் தரமற்ற மணல் மற்றும் சிமென்ட்டால் கம்பிக்கட்டு இல்லாமல் கட்டப்பட்டது. இது குறித்து யூனியன் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டது. தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் கட்டிடம் இடிந்து என் மனைவி உயிரிழந்துள்ளார். இதனால் கட்டிட ஒப்பந்ததாரர் பரமசிவம் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், எனக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி கே.குமரேஷ்பாபு விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.பாஸ்கர்மதுரம் வாதிட்டார். பின்னர் நீதிபதி, ”மனுதாரர் இழப்பீடு கோரி புதிதாக மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை தமிழக சமூக நலத்துறை செயலாளர் பரிசீலித்து 12 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.