சென்னை: நியாய விலைக்கடைகளில் இலவச பொருட்கள் வாங்கவரும் பொதுமக்களிடம் பணம் செலுத்தி வாங்கக்கூடிய பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது என கூட்டுறவுதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் காமதேனு கூட்டுறவு சங்க திருமண மண்டபத்தை கூட்டுறவுதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு  வங்கிகளில் மட்டும் 66,000 கோடி ரூபாய்க்கு மக்கள் வைப்பு தொகை வைத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார். 40,000 கோடி ரூபாய்க்கு நகை கடன் மற்றும் 10,000 கோடி ரூபாய்க்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் அரசு கடன் அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.