மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியின்போதுதான் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.

மக்களவையில் சிவசேனை உறுப்பினர் அரவிந்த் சாவந்த் கூறிய புகாருக்கு விளக்கம் அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறியதாவது: பொதுத்துறை நிறுவனங்களான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் (எம்டிஎன்எல்) ஆகிய இரு நிறுவனங்களும் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டன. வோடபோன் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் அரசு செயல்பட்டது.

பிஎஸ்என்எல் நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாகும், அதை மீட்டு அந்நிறுவனம் 4 ஜி அலைக்கற்றை பெற்று தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் பாஜக அரசுதான் நடவடிக்கை எடுத்தது.

10 ஆண்டுகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பிஎஸ்என்எல் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டது. 2 ஜி அலைக்கற்றையில் அதிகபட்ச முறைகேடு நடந்ததும் காங்கிரஸ் ஆட்சியில்தான் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

2014-ம் ஆண்டில் பாஜக தலைமையிலான அரசு பதவியேற்றபோது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஊழியர்களுக்கு மாத சம்பளம் அளிக்கக் கூட நிதி நிலை இல்லாத நிலையில் இருந்தது. பாஜக அரசுதான் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிமுகம் செய்து அவர்களுக்குரிய தொகையை வழங்க நிதி ஒதுக்கியது. இப்போது 4 ஜி அலைக்கற்றை பெறுவதற்கு உரிய நிதி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் சூழல் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.