காங்கிரசும் பணமாக்குதல் திட்டத்தை அமலாக்க முயற்சித்தது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.

நாட்டின் பொதுச் சொத்துக்களை தேசிய பணமாக்குதல் திட்டம் மூலம் பாஜக விற்பனை செய்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தி சமீபத்தில் விமர்சித்திருந்தார். இதனையடுத்து பாஜக தலைவர்கள் பலரும் அவருக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், “காங்கிரஸ் கூட பணமாக்குதல் திட்டத்தை அமலாக்க முயற்சித்தது.” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

ரூ.8,000 கோடி மதிப்பிலான மும்பை – புனே விரைவு சாலையை பேரம் பேசி ஏலம் விட முயற்சி மேற்கொண்டதை குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அந்த அரசு பணமாக்குதல் திட்டத்தை அமலாக்க முயற்சித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ராகுல் காந்தி, “கடந்த 70 ஆண்டுகளில் பொதுமக்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட இந்தியாவின் கிரீடத்தை பாஜக அரசு விற்று வருகிறது.” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

மத்திய அரசு அறிவித்த இந்த பணமாக்குதல் திட்டத்தில் 25 விமான நிலையங்கள், 40 ரயில் நிலையங்கள், 15 ரயில்வே விளையாட்டரங்கங்கள் ஆகியவற்றில் தனியார் முதலீடு செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.