நானி தயாரிப்பில் உருவாகி வரும் ஆந்தாலஜியில் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் நடித்துள்ளார்.

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. ‘டக் ஜெகதீஷ்’, ‘ஷ்யாம் சின்கா ராய்’, ‘அண்டே சுந்தரானிகி’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் ‘டக் ஜெகதீஷ்’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

நடிகராக மட்டுமன்றித் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் நானி. இவருடைய தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதைக்களங்கள் கொண்டவை. தற்போது ‘மீட் க்யூட்’ என்ற ஆந்தாலஜியைத் தயாரித்து வருகிறார்.

5 கதைகள் கொண்ட ஆந்தாலஜியை அறிமுக இயக்குநர் தீப்தி கன்டா இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வந்தது. இதில் ஒரு ஆந்தாலஜியில் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் நாயகனாக நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.

‘குக் வித் கோமாளி’ அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “தெலுங்கில் ‘மீட் க்யூட்’ ஆந்தாலஜி மூலமாக அறிமுகமாகிறேன். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார். அஸ்வினுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

இதில் அஸ்வின் மட்டுமன்றி சத்யராஜ், ரோகிணி, ஆதா ஷர்மா, வர்ஷா பொல்லாமா, அகன்ஷா சிங், சுனைனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.