2020 இல் தொடங்கி உலகெங்கிலும் மூன்று அலைகள் அடித்து ஓய்ந்து விட்டது. இனி சகஜமான வாழ்க்கை இருக்கும் என்று நினைக்கும் போது, மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினந்தோறும்  அதிகரித்து வருகிறது.தளர்வுகள் கொடுக்கப்பட்ட பின்னர் நாடு முழுவதும் சில நூறுகளில் இருந்து வந்த தொற்று எண்ணிக்கை கடந்த 3 மாதங்களாக ஆயிரங்களில் பதிவாகி வருகிறது. அதுவும் இந்த மாதம் தொடங்கியதில் இருந்து நாளுக்கு நாள் எண்ணிக்கை வேகமாக உயர்ந்துகொண்டே இருக்கிறது.

பாதிப்பு எண்ணிக்கை:

இந்தியாவின் நிலவரப்படி நேற்று முன்தினம் 16,299 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 16,561 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,42,23,557 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி, உ.பி., ஹரியானா ஆகிய வட மாநிலங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெல்லியில் நேற்று 2,726 பேருக்கும், ஹரியானாவில் 1,075 பேருக்கும், உ.பி.யில் 1,018 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. தினசரி பரிசோதனைகளில் 5.44% பேருக்கு தோற்று உறுதியாகி வருகிறது.

குணமடைந்தோர் எண்ணிக்கை:

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை நேற்று 18,053 எனப் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரையில் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,35,73,094 ஆக உள்ளது. குணம் அடைவோர் விகிதம் 98.53 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நோயின் தீவிரம் அதிகரித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை என்பது பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில் 0.28% ஆக இருக்கிறது.நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1, 23,535 ஆகக் குறைந்தது.

கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள்  எண்ணிக்கை என்பது நேற்று முன்தின 53 இல் இருந்து நேற்று 49 ஆகக் குறைந்துள்ளது. கொரோனா தொற்றால் இதுவரை இறந்தோர் மொத்த எண்ணிக்கை தொற்று பதிப்பில் 1.19 சதவீதம், அதாவது 5,26,928 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று கேரளாவில் 10 பேரும், டெல்லியிலும், கர்நாடகத்திலும் தலா 6 பேரும், மராட்டியத்தில் 5 பேரும், மேற்கு வங்காளத்தில் 4 பேரும், உ.பி.யிலும், பஞ்சாபிலும் தலா 3 பேரும், உத்தரகாண்ட், சிக்கிம், குஜராத்தில் தலா 2 பேரும், அசாம், சண்டிகார், காஷ்மீர், ஜார்கண்ட், மணிப்பூர், ஒடிசாவில் தலா ஒருவரும் தொற்றால் நேற்று இறந்துள்ளனர்.