தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 686 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3951-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் அனைவரும் வெளியில் செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.கீர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு செய்திக்குறிப்பில், “ ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு கட்டாயம் அபாராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் ஒருவருக்கொருவர் 6 அடி தூரம் இடைவெளி விட்டு நிற்க வேண்டும். அனைத்து வணிக விற்பனை கூடங்கள் மற்றும் உணவகங்களின் நுழைவு வாயிலில் கட்டாயம் கைகளை சுத்தம் செய்திடும் கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும். மேலும் உடல் வெப்பநிலையை கண்காணிக்க வேண்டும்.

பெரிய வணிக வளாகங்களில் ஏ.சி பயன்படுத்த தடை. பொதுமக்கள் அவசியமின்றி பொதுஇடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். திருமண மண்டபங்களில் பொதுமக்களின் எண்ணிக்கை 100 நபர்கள் இருப்பதை உறுதி செய்யவேண்டும். கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசிகள் கட்டாயமாக போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனையில் உள்ள மருத்துவரை அணுகுமாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது