தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் நடந்த சிறப்பு மெகா முகாமில் 17.70 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இந்தியாவில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணி கடந்த 2021 ஜன.16-ம் தேதிதொடங்கியது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போடும் விதமாக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் மெகா முகாம் நடத்தப்பட்டு வந்தது. 27 மெகா முகாம்கள் நடந்த நிலையில், 93 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப் பட்டது.

இதையடுத்து, பொது இடங்களுக்கு வருவோர் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற உத்தரவு கடந்த மாத தொடக்கத்தில் திரும்ப பெறப்பட்டது. அதனால், மெகா முகாமும் நிறுத்தப்பட்டது. வழக்கமான மையங்களில் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

கரோனா தொற்று 4-வது அலை

இதற்கிடையில், கரோனா தொற்றின் 4-வது அலை ஜூன் மாதம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்திருந்தனர். இந்த சூழலில், சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும், டெல்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஐஐடி மாணவர்களுக்கு…

தமிழகத்திலும் 21 வரை குறைந்ததினசரி தொற்று பாதிப்பு 90-ஐ நெருங்கிவிட்டது. சென்னை ஐஐடிஉள்ளிட்ட கல்லூரிகளில் குழுவாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அதனால், மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த வாரம் சனிக்கிழமை 28-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடந்தது.

இந்நிலையில், ஒரே நாளில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்காக தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நேற்றுநடத்தப்பட்டது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், ஊராட்சி, நகராட்சி அலுவலகங்கள், பேருந்துநிலையங்கள், ரயில் நிலையங்கள் என பொதுமக்கள் கூடும் அனைத்துஇடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டன. சென்னையில் மட்டும்3,300 இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டது.

குறிப்பிட்ட காலத்தில் 2-வதுதவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 1.50 கோடி பேர், இரண்டு தவணை போட்டு 9 மாதம் முடிந்தும் பூஸ்டர் தவணை போட்டுக்கொள்ளாத 60 வயதை கடந்தவர்கள் என மொத்தம் 2 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை நடந்த முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

சுகாதார அமைச்சர் ஆய்வு

முன்னதாக, சேலம் மாவட்டம் ஏற்காடு பிரதான சாலையில் உள்ள சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சென்னை மாவட்டங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களையும் அமைச்சர் பார்வையிட்டார். நேற்றைய முகாமில் தமிழகம் முழுவதும் 17.70 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், வழக்கமான தடுப்பூசி மையங்கள் இன்று செயல்படாது. அரசு மருத்துவமனைகளில் மட்டும் தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிதாக 47 பேருக்கு தொற்று பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 47 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 26, பெண்கள் 21 என மொத்தம் 47 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 23 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,353-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து 15,850 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 68 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர்.

தமிழகம் முழுவதும் 478 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,025-ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 9,068 பேர் இறந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் கரோனா தொற்று பாதிப்பு 89-ஆகவும், சென்னையில் 30-ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.